தனியார் தொழிற்சாலை குடிநீர் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் குடிநீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க முடியாது என ஹட்டன் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வுட் - டிக்கோயா, சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்ட பகுதியில் 05ஆம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் குடிநீரினை மறைத்து டிக்கோயா பிலிங்பொனி தோட்டப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என ஹட்டன் நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு நோர்வுட் பிரதேசசபையிடம் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் அனுமதி பெறவில்லையெனவும் குறித்த நீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு சென்றால் சுமார் 5000இற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீரின்றி பாதிக்கப்படுகின்றமை தொடர்பிலும் நோர்வுட் பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நோர்வுட் பிரதேசசபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளபட்ட போதே ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சியினால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே பிரதேசமக்கள் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.