அமைச்சரின் உத்தரவின்படி நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் கண்காணிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கனகதவராசா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து சென்று காணொளி பதிவுகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கணேசன் வழங்கிய உத்தரவின்படி அரச அதிகாரிகள் இப்பணியை இன்று மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, பொலிஸ் அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு நேரடி விஜயம் செய்து தற்போது வரை அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகள் தொடர்பாக காணொளி பதிவுகளை எடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மனோ கணேசன் உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் கண்காணிப்பு பணிக்கு சென்ற அரச அதிகாரிகள் காணொளி பதிவினை மேற்கொண்டிருந்ததுடன், இப்பணியில் ஈடுபட்டோரின் பெயர்களை கேட்டு பொலிஸார் பதிவுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.