வீரவங்சவிடம் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் சதோச நிறுவனம்

Report Print Steephen Steephen in சமூகம்

சதொச நிறுவனத்தின் வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளது முற்றிலும் பொய்யானது என இலங்கை சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீரவங்ச வெளியிட்ட பொய்யான தகவலால் சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரிடம் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச கூறும் இடத்திற்கோ, அல்லது அந்த தினத்திலேயோ சதோச நிறுவனத்தின் வாகனங்கள் செல்லவில்லை. இது முற்றிலும் பொய்யானது. இதன் மூலம் மக்கள் சதோச நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்த வீரவங்ச முயற்சித்துள்ளார்.

அத்துடன் இது குறித்து உரிய விசாரணைகளை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளியிட வேண்டும் என கோரி, சதோச நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு நடந்த தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் மற்றும் றிசார்ட் பதியூதீன் இடையிலான தொடர்புகளை சாட்சியங்களுடன் ஒப்புவிக்க தயாராக இருப்பதாகவும் அது முடியாமல் போனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை தாக்குதல் நடந்த வீட்டுக்கு சதொசவின் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் வீரவங்ச குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன்னரும் தற்கொலை குண்டுதாரிகள் சதொச வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் றிசார்ட் பதியூதீனுக்கு சவால் விடுத்திருந்த வீரவங்ச, சவாலை எதிர்கொண்டு தான் நிரபராதி என நிரூபிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்த சவாலில் தான் தோற்றுப் போனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் வீரவங்ச கூறியிருந்தார்.