கடற்படையினரின் அச்சுறுத்தல்: வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய போராட்டத்தின்போது அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இன்று விசாரணைகள் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.

இதன்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளித்து நின்ற சிவில் உடையில் இருந்த ஒருவர் குறித்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தவாறு இருந்ததால் குறித்த இடத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறியதோடு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது அங்கு நின்றவர்கள் பிடிக்கப்பட்டு விசாரித்தபோதுதான் கடற்படையைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை பொலிசாரிடம் கையளிப்பதற்காக பொலிசாரை குறித்த இடத்திற்கு அழைத்தபோது பொலிசார் குறித்த இடத்திற்கு வர தாமதமான காரணத்தினால் குறித்த நபரை போராட்டம் நிறைவடையும் இடத்தில் இருந்த பொலிஸாரிடம் கையளிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

குறித்த இடத்தில் இருந்த கடற்படை முகாமில் சந்தேக நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி அங்கு நின்ற பொலிசாரிடம் அவர்கள் கையளித்திருந்தனர்.

இருப்பினும் அந்த இடத்தில் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அவரை விடுவித்து இருந்ததோடு குறித்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் சென்று ஊடகவியலாளர் தவசீலன் தன்னை தாக்கியதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் ஊடகவியலாளர் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைக்கு அழைத்து வந்தது ஊடகவியலாளர் குறித்த நபரை தாக்கியதாக தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இருப்பதோடு அடுத்த வழக்கு தவணையாக ஒன்பதாம் மாதம் பத்தாம் திகதி இடம்பெற இருக்கின்றது .

இந்நிலையில் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைவாக இன்றைய தினம் விசாரணைகள் இடம் பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், மரியசுரேஷ் ஈஸ்வரி , ஊடகவியலாளர் தவசீலன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜா அவர்களுடைய தலைமையிலே இந்த விசாரணைகள் இடம் பெற்றது.

இந்த விசாரணைகளின் போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு தங்களால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என கடற்படையினர் தெரிவித்த உறுதிமொழியை அடுத்து அவர்களுடைய அந்த பிரச்சனை சுமூகமாக இரண்டு தரப்பினராலும் தீர்க்கப்பட்டது.

எனினும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய முறைப்பாட்டில் பொலிசார் திட்டமிட்டு அநீதி இழைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் தெரிவித்திருக்கிறார்கள்.