ஜனாதிபதிக்கு எதிராக வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில் தமது பிள்ளைகளை வேண்டி பிரார்தனைகளில் காணாமல் போன உறவினர்கள் ஈடுபட்டதனை தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக கந்தசுவாமி கோவில் வீதியூடாக சுழற்சிமுறை உண்ணாவிரதம் இடம்பெறும் கொட்டகையை வந்தடைந்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் குறித்த போராட்டமானது இன்றுடன் 843வது நாளாக காணாமல் போன உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன், சிறிசேனவே நீங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விடுவதற்கு முன் எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காட்டுங்கள், ஜனாதிபதியே நாங்கள் உங்களை வரவேற்கவில்லை நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பி போங்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.