தற்கொலைக் குண்டுதாரியின் உடலை தமிழரது புனித மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Rusath in சமூகம்
1699Shares

தற்கொலைக் குண்டுதாரியின் உடலை மட்டக்களப்பு - புதுநகர், ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, ஆலையடிச்சோலை மயான வாசலுக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் குறித்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.