மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுத்தேவையினை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுத்தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு மீளாய்வு கூட்டம் இன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டதுடன், தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் காணிகள் இல்லாத நிலையில் பலர் வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மகிழுர்முறைப் பகுதியில் கடந்த காலத்தில் குடிசையில் இருந்தவர்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் தகரத்தினாலான கொட்டில்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கடுமையான வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் தினமும் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும், அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

காணிகள் இல்லாதவர்கள் வேறு பிரதேச செயலகப்பிரிவுகளில் குடியேற விரும்பினால் அவர்களுக்கான வீட்டுத் திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுக்க தயாராக விருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று பெரியகல்லாறு பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களின் முகவரிகள் இலங்கை மின்சாரசபையினால் அம்பாறை மாவட்ட முகவரி பொறிக்கப்பட்டு வருவதாக இங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான எல்லைப்பிரச்சினைகள் காணப்படுவதனால் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும், அவ்வாறான செயற்பாடுகளை தீர்க்க நடவடிக்கையெடுக்குமாறும் அம்பாறை மாவட்ட மின்சாரசபைக்கு கடிதம் அனுப்புமாறு பிரதேச செயலாளருக்கு இணைத்தலைவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் களுதாவளை குளம் மற்றும் மகிழுர் பெரியகுளம் ஆகியவற்றினை புனரமைப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், அவற்றிற்கான நிதிகளை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமை குறித்தும் அவற்றினை பிரதேசசபையிடம் வழங்குமாறும் மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் ஞா.யோகநாதனால் இங்கு கோரிக்கைள் முன்வைக்கப்பட்ட நிலையில், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமே மேற்கொண்டுவருவதாகவும், ஒருரிரு மாதங்களில் அதனை திறக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.