சஹ்ரானுக்கு தௌஹித்தும் தெரியாது! இஸ்லாமும் தெரியாது - உல‌மா க‌ட்சி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

உல‌க‌த்திலேயே தௌஹித்தின் பெய‌ரால் தீவிர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர் சஹ்ரான் ம‌ட்டுமே என்ற‌ த‌மிழ் நாட்டின் இஸ்லாமிய‌ போத‌க‌ர் பி. ஜெய்னுலாப்தீனின் க‌ருத்து உண்மைக்கு புறம்பானதாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் இ‌ன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

சஹ்ரான் என்ப‌வ‌ர் தௌஹித்தின் பெய‌ரில் தாக்குத‌லில் ஈடுப‌ட‌வில்லை. ஐ எஸ்சின் பெய‌ரிலேயே தாக்குத‌ல் மேற்கொண்டார். தாக்குத‌லுக்கு முன் ஐ எஸ் உடைய‌ணிந்து வாக்குறுதி நிறைவேற்றும் வீடியோவும் வெளி வ‌ந்திருந்த‌து. ஐ எஸ் அமைப்பு இத‌ற்கு பொறுப்பேற்ற‌தாக‌ அர‌ச‌ ஊட‌க‌ங்க‌ளும் தெரிவித்துள்ள‌ன‌.

சஹ்ரான் தேசிய‌ தௌஹித் ஜ‌மாத்திலிருந்து இரு வ‌ருட‌த்துக்கு முன்பே வெளியேற்ற‌ப்ப‌ட்டு விட்டார் என்ப‌தை ஏற்றுக்கொள்ளும் பீ ஜெய்னுலாப்தீன், சஹ்ரான் தௌஹித்தின் பெய‌ரால் த‌ற்கொலை தாக்குத‌ல் மேற்கொண்டார் என்ப‌து பிழையான‌தும் முர‌ண்பாடான‌ க‌ருத்துமாகும்.

தௌஹித் ஜ‌மாத் அமைப்பிலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் எப்ப‌டி தௌஹித்தின் பெய‌ரில் தாக்குத‌ல் செய்த‌தாக‌ சொல்ல‌ முடியும்?

உண்மையில் சஹ்ரானுக்கு தௌஹித்தும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது, பொது அறிவும் கிடையாது என்ப‌தே உண்மை.

சஹ்ரானுக்கு ஓரிறைக்கொள்கை என்ற‌ தௌஹித் தெரிந்திருந்தால் அத‌ற்கான‌ பிர‌சார‌த்தை உல‌க‌ளாவிய‌ ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சென்றிருப்பார். ஆனால் அவ‌ர் தௌஹித் ஜ‌மாத்திலிருந்து கொண்டு முஸ்லிம்ளுக்குள் வ‌ண்டி ஓட்டினார். அத்துட‌ன் ஜ‌ன‌நாய‌க‌த்துக்கெதிராக‌ தீவிர‌வாத‌மாக‌ பேசிய‌தால் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டார் என‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

உண்மையில் சஹ்ரானுக்கு இஸ்லாம் தெரிந்திருந்தால், யுத்த‌ம் பிர‌க‌ட‌னப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ நிலையில் யாரையும் கொல்ல‌ முடியாது என்ற‌ இஸ்லாத்தின் அறிவுரையையும், குறிப்பாக‌ யுத்த‌த்தில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ அப்பாவிக‌ளை கொல்ல‌ இஸ்லாத்தில் இட‌மில்லை என்ப‌தையும் தெரிந்திருப்பார்.

அவ‌ருக்கு பொது அறிவு இருந்திருந்தால் தாக்குத‌ல்தாரிக‌ள் யாரென‌ தெரிய‌ வ‌ரும் போது அவ‌ர்க‌ள‌து குடும்ப‌ங்க‌ள் சிறைக்கு செல்லும் என்ப‌தையும், பொருளாதார‌ம் அர‌சுட‌மையாக்க‌ப்ப‌டும் என்ப‌தையும், முஸ்லிம் ச‌மூக‌ம் மொத்த‌ இன‌வாத‌ தாக்குத‌லுக்குள்ளாகும் என்ப‌தையும் புரிந்திருப்பார்.

நாம் இந்த‌ உண்மைக‌ளை சொல்லும் போது நாமும் நாளை ஐ எஸ் தாக்குத‌லுக்குள்ளாக‌லாம் அல்ல‌து அத‌ன் பெய‌ரில் யாரும் எம்மை கொல்ல‌ முனைய‌லாம். ஆனாலும் இறைவ‌னுக்காக‌ உண்மையை சொல்லாம‌ல் இருக்க‌ முடியாது.

ஆக‌வே தௌஹித்தின் பெய‌ரில் உல‌கில் எந்த‌வொரு த‌ற்கொலை தாக்குத‌லும் இன்று வ‌ரை ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தே உண்மை என்ப‌தை சிற‌ந்த‌ சீர்திருத்த‌வாதியான‌ பீ ஜே உட்ப‌ட‌ அர‌சுக‌ளும் தெரிந்து கொள்ள‌ வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.