திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் 12 வயது சிறுமி உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருக்கோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி கோமரங்கடவல - கல்கடவல பகுதியைச் சேர்ந்த நிஸாந்தகே டினூஷா தெவ்மினி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் கல்வியை மேற்கொண்டு வந்த சிறுமி தனது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன வீட்டினை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கல்கடவல பகுதிக்கு தனது தாயுடன் சென்றிருந்த வேளை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அருகிலுள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.