மருத்துவர் ஷாபியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சி

Report Print Steephen Steephen in சமூகம்

கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபி எதிராக சுமத்தப்பட்டுள்ள குடும்ப கட்டுப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதுள்ளதால் அவரிடம் எந்த விதத்திலாவது ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது விகாரையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் இதனை கூறியுள்ள அத்துரலியே ரதன தேரர், அதனை தன்னால் மட்டுமே செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

“ மருத்துவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எதனையும் நிரூபிக்க முடியாது. இதுதான் உண்மை. குருணாகல் டி.ஐ.ஜி, திவயின பத்திரிகையின் ரந்துனு, குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வீர பண்டார என அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அவர்கள் என்னுடன் பேசினர். தற்போதுள்ள நிலைமையில், தாம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எங்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை வரலாம். உங்களால் தான் எங்களை காப்பற்ற முடியும், ஏதாவது செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

இதற்கு செய்ய வேண்டியது ஒரே வேலைதான் இருக்கின்றது. மூளை சலவை செய்து எப்படியாவது மருத்துவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும். அதனை என்னால் செய்ய முடியும்.

இதில் இருந்து விடுப்பட முடியாது, வெளியில் வர முடியாது என்று அவனிடம் கூற வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். உனக்கு அதுதான் நடக்கும் என்று கூறவேண்டும்.

அத்துடன் ஷாபிக்கு எப்படியும் நாட்டில் இருக்க முடியாது. மக்கள் அவருக்கு என்ன செய்வார்களே தெரியாது என்று அச்சுறுத்த வேண்டும். நன்றாக அச்சுறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வைக்க வேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் வழங்குங்கள் காப்பாற்றுகிறோம் என்று கூறவேண்டும்.

குற்றவாளி இல்லை எனக் கூறி பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். குற்றவாளி என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி விட்டு வெளியில் வருகிறீர்களாக என்று கேட்க வேண்டும்.

மருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாடு செய்யவில்லை என யாராவது கூறினால், நாம் மேற்கொண்ட பிரசாரத்தில் பயனில்லை.

குற்றத்தை செய்தேன் என்று அவரே தனது வாயால் கூறினால், அவரும் தப்பித்தார். நாமும் தப்பித்தோம். அவரை குடும்பத்துடன் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும்.

மருத்துவர் ஷாபியை பார்க்க எவரையும் அனுமதிப்பதில்லை அதுதான் பிரச்சினை” என அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers