சிறையில் தற்கொலைக்கு முயன்ற கருணா குழு உறுப்பினர்! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Kumar in சமூகம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று தற்கொலைக்கு முயற்சி செய்து, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடி முனைக்காடு மயானத்தில் நேற்று அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சந்தேக நபர் அந்த இடத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டு முனைக்காடு பொது மயானத்தில் புதைக்கப்பட்டதாக வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கருணா குழுவில் செயற்பட்டு வந்த லிங்கம் எனப்படும் இந்த ஆயுதக் குழு உறுப்பினர், நேற்று பொதுமயானத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று பகல் சிறைச்சாலையில் கழிவறையில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தற்பொழுது ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Latest Offers