இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகரையில் போராட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரையில் தமிழ் மக்களின் நிலங்களை சுவீகரித்து இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வாகரை பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் தமிழ் தேசிய முன்னணி உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் இணைந்து தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி எனும் இரு இடங்களில் முறையே 42 ஏக்கர், 17 ஏக்கர் பரப்பு காணிகள் உள்ளடங்களாக இல்மனைற்று தொழிற்சாலை அமைக்கப்படுவதையும் , மேலும் இதற்காக கரையோரமாக 48 கிலோ மீ்ற்றர் நீளம் வரை அபகரித்தமைக்கு (30 வருட திட்டத்தினை தனியார் நிறுவனமொன்று செயற்படுத்துகின்றது) எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் விவசாயம், மீன்பிடி தொழில் நேரடியாக பாதிக்கப்படுவதோடு பாரிய இயந்திர பாவனையின் அதிர்வுகள் மீன்கள் ஆழ்கடல் நோக்கி பயணிக்கும் நிலையும் ஏற்படும்.

மண்ணின் இயற்கை கட்டமைப்பு உடைவதால் உப்பு வடிகட்டப்படாது நன்னீர் உவர் நீராகும். இதனால் விவசாயம் பாதிப்படையும் கால்நடைகள் பாதிப்படையும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

கடலரிப்பு ஏற்பட்டு பூர்வீக நிலம் கடலினுள் செல்லும் சுகாதாரப் பிரச்சனைகள், சத்தம், தூசிகள், சுவாசநோய்கள் அதீத வரட்சி(1000’C வரையான வெப்பம் வெளிவிடப்படுகிறது) கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படும்.

இதேவேளை மண் சுத்திகரிப்புக்காக வெருகல் ஆற்றில் ஆள்துளைக்கிணறுகள் வைக்கப்படும் நீர் உறிஞ்சப்படுவதால் கடல்நீர் ஆற்றினுள் வரும், ஆற்றை அண்டிய சேனைப்பயிர்ச் செய்கை பாதிப்படையும்.

நிலத்தடி நீர் வற்றும் 10 வருடங்களின் பின்னர் வலது குறைந்த திறனற்ற குழந்தைகள் பிறக்கும். ஆபத்துகளை எதிர் நோக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers