கண்ணெதிரே இரத்தத்துடன் கிடந்த தந்தையை காப்பாற்ற மன்றாடிய மகள்! நேர்ந்த அவலத்தை கூறி கதறும் பெண்

Report Print Sujitha Sri in சமூகம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் தமது உறவுகளை பறிகொடுத்த பலர் நேற்றைய தினம் தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது யுவதியொருவர் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் தனது தந்தையை இழந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர்விட்டழுதுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், காலை 8.40 மணியளவில் நான் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மிகப்பெரிய தீப்பிளம்பு தோன்றிய நிலையில் நான் கீழே விழுந்து விட்டேன்.

இதனையடுத்து நான் கண்களை திறந்த போது அக்கா என அழைத்து கொண்டு என்னுடைய சகோதரி என்னை நோக்கி ஓடி வந்தாள். நான் என்னுடைய இடதுபுறம் திரும்பி பார்த்தபோது என தந்தையின் தலையிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

அப்போது தந்தையை தூக்கிச் செல்லுமாறு அனைவரிடமும் மன்றாடினேன். அவர் தலையிலிருந்து அதிகளவில் இரத்தம் வருகிறது என கூறினேன்.

எனினும் யாரும் எனக்கு உதவ வரவில்லை. எல்லோரும், வீடியோவும் புகைப்படங்களும் எடுத்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக இருவர் வந்து தந்தையை முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள்.

நானும் எனது சகோதரியும் அவருடன் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. அடையாளம் தெரியாத நபரொருவர் எங்களுக்கு உதவ வந்தார்.

ஆனால் அந்த நபர் எனது தந்தையின் மோதிரம், கையடக்க தொலைபேசி, பணம் என்வற்றை களவெடுத்து சென்று விட்டார்.

நாம் எமது தந்தையை இழந்து விட்டோம். அத்துடன் இங்கு மனிதத்தன்மை இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன் என தான் பட்ட வேதனையை கதறியவாறு கூறியுள்ளார்.

வீடியோ - சினன்

Latest Offers