ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு! மேலும் மூன்று இளைஞர்கள் கைது

Report Print Murali Murali in சமூகம்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட கோவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞர்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் கடந்த 12ம் திகதி கோவையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை தீவிரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் மூன்று இளைஞர்கள் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை சமூக வலைதளம் மூலமாக பரப்பி அந்த அமைப்பிற்கு அடிதளம் அமைத்து அதன் மூலம் தீவிரவாத செயல்களை கோவையில் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 28ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.