ரதன தேரரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட பணிப்புரை நிராகரிக்கப்பட்டது?

Report Print Kamel Kamel in சமூகம்

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சஹாப்தீன் சாபியை சிறையில் வைத்து சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக வைத்தியர் சாபி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைத்தியர் சாபியை சிறையில் வைத்து சந்தித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலமொன்றை பெற ரதன தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாக முயற்சித்துள்ளார்.

எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் சாபீயை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ரதன தேரர், ஜனாதிபதியிடம் கோரிய நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பினை ஏற்படுத்தி ரதன தேரருக்கு இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

எனினும், இந்த பணிப்புரையை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நிராகரித்துள்ளனர் என தெற்கு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.