கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலய பிரதம குரு க.கு.சச்சிதானந்த குருக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிடோர் முதற்கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாநகரசபை உறுப்பினர் ராஜன் கருத்து தெரிவிக்கையில்,

எமது நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடித்து வந்துள்ளன. இனியும் நாம் பொறுமை காக்க தயாரில்லை.

எனவே நாம் களத்தில் இறங்குகின்றோம். எமது தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இதற்கு பூரணமாக கிடைக்குமென பெரிதும் நம்புகிறோம்.

எம்முடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட விரும்புவோர் தாராளமாக கலந்து கொள்ள முடியும். இது தினம் தினம் தமிழ் பிரதேசமெங்கும் தொடர்ந்து வியாபிக்கும்.

முதலில் அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் என தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

30 வருடகாலமாக இயங்கி வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் தொடர்பில் நாம் பல தடவைகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம் செய்துதருவதாக உறுதியளித்தனர். ஆனால்இந்தக்கணம் வரை எதுவுமே நடைபெறவில்லை. எனவே தரமுயர்த்தப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதமிருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் மக்களது பிரதேச செயலகம் தரமுயர்த்தி தருவதற்கு அம்பாறை மாவட்டமுஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒருசிலர் முட்டுக்கட்டையாக இருப்பதாக உண்ணாவிரதபோராட்டத்தை முன்னெடுத்துவரும் போராட்ட காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருசில சுயலாப அரசியல்வாதிகளுக்காக ஒட்டுமொத்த கல்முனை தமிழ் பிரதேச மக்களின்மிக பிரதான கோரிக்கையை காதுகொடுத்து கேளாது இருப்பது நல்லாட்சி அரசாங்கத்தைகொண்டுவந்த தமிழ் மக்களுக்கு அரசு செய்யும் கைங்கரியம் இதுவா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.