வட மாகாணத்தின் கல்வி அமைச்சை தனி அலகாக்க அங்கீகாரம் வழங்கியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர்

Report Print Sumi in சமூகம்

வடக்கு மாகாணத்தின் கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இருந்து கல்வி அமைச்சை தனி அலகாக்கி, கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், வட மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவனிடம் குறித்த கோரிக்கையை முன் வைத்திருந்த நிலையில் இதனை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆராய்ந்து அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

வட மாகாண கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுகள், ஏற்படும் பின்னடைவுகள் அதற்கான காரணங்களை விளக்கி அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவனுடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதில் முக்கியமானதாக வட மாகாணத்திற்கு தனியான கல்வி அமைச்சு வேண்டும் என்ற கோரிக்கையை எழுத்து மூலமாக முன்வைத்திருந்தனர்.

அதன் பிரதிகளை மத்திய கல்வி அமைச்சரிடமும், மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் கையளித்திருந்தனர்.

அதனை முழுமையாக ஆராய்ந்த கல்வி இராஜாங்க அமைச்சர் வடக்கிற்கென தனியான, வடமாகாண கல்வி அமைச்சு தேவை என்பதனை ஆளுநரிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதன் பிரதியை சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் விரைந்து செயற்படுத்தி வட மாகாணத்தின் கல்வியை புதிய பாதைக்கு இட்டுச்செல்வார் என நம்புகின்றோம் என்று பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.