கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்

Report Print Malar in சமூகம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன்பாக முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் உள்ள எம் தமிழ் மக்களின் இருப்பு நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாகி வருகிறது.

அதில் ஒன்றே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது. இதற்கு காரணம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கூட்டமைப்பை விட அரசாங்கம், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

இத்தகைய அரசாங்கத்தினை தாங்கி பிடித்து கொண்டு கூட்டமைப்பு உள்ளது. எம்மை பொறுத்தவரை எம் மக்களின் இருப்பே முக்கியம்!

அதற்கு நாம் எவ்வாறும் குரல் கொடுக்கவும், போராடவும் தயார்! அரசாங்கம் சாதகமான பதிலை தரா விடின் கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

இதேவேளை இன்று காலை முதல் கல்முனையிலும் சாகும் வரையிலான உண்ணவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது அம்பாறை உறவுகளுக்காக நாம் கரம் கோர்த்து செயற்படுவோம் என கூறியுள்ளார்.