மட்டக்களப்பில் சூறைக்காற்றினால் கட்டடங்கள் மற்றும் மரங்களுக்கு சேதம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட பலத்த இடி, மின்னல் மற்றும் மழையுடனான சூறைக்காற்றினால் வீடுகள், கட்டடங்கள், மரங்கள் என்பன சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இடி, மின்னலில் சிக்கி மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி - பெரியவெட்டை பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேயனோடை பிரதேசத்தில் வீசிய சூறைக்காற்றினால் வீடுகள், மரங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

கூரைகள் சூறைக்காற்றினால் கழற்றி வீசப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன.

இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் வீசிய சூறைக்காற்றினால் அங்கிருந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் கழற்றி வீசப்பட்டதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை ஏராளமான பயன்தரும் மரங்களும் சரிந்து விழுந்துள்ள நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சேத விவரங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தங்கள் இடங்களுக்கு அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.