நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினை பற்றி பொய் பரப்புரை செய்யப்படுவதாக தகவல்

Report Print Mohan Mohan in சமூகம்

தமிழர்களின் பூர்வீக வாழ்விடமான யாழ். நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் போருக்கு பின் புதிதாக நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்று வந்துள்ள நிலையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என அரசாங்கம் அறிவித்தாலும் சில மதவாத போக்குடையவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியினை ஏற்படுத்துகின்றது.

இந்த விடயத்தை எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த நிலையில் தான் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் குருகந்த றாயமகா விகாரை என பெயர் சூட்டி பௌத்த விகாரையினையும் நிறுவியுள்ளார்கள். தற்போது இரு மதங்களுக்கிடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இதற்கமைவாக அமைதிக்கு பங்கம் இன்றி இரு தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டு தடவைகள் சிங்கள மக்களை அழைத்து அந்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி, நீராவியடி பிள்ளையார் ஆலயம் பற்றியும் அதன் நிர்வாகம் பற்றியும் தவறான புரிதலை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றார்.

அங்கு செல்லும் அனைத்து சிங்கள மக்களுக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஒன்று இல்லை என்றும், இதனை தமிழர்கள் அபரிக்க முயற்சி செய்வதாகவும், செம்மலையினை சேர்ந்த நவநீதன் என்பவரும் ஆலய நிர்வாகத்தினரும் தன்னை அவதூறாக பேசியதாகவும் அவர்கள் வெளிநாட்டு பண சக்திகளின் பின்னணியில் செயற்பட்டு வருவதென்றான பரப்புரைகளை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினையும் சிங்கள மக்களுக்கு இனவாதத்தினையும் ஊட்டும் நடவடிக்கையில் குறித்த விகாராதிபதி ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.