நைற்றாவின் வேலைத் திட்டங்களை விரிவாக்க நடவடிக்கை

Report Print Mubarak in சமூகம்

நைற்றாவின் வேலைத் திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் தற்போது தொடரும் பணிகளின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கோடு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) மாவட்ட முகாமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் உடனான முக்கிய சந்திப்பு இன்று அதிகார சபையின் தலைவர் நஸிர் அஹமட் முன்னிலையில் இராஜகிரியவிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது தத்தமது பகுதிகளில் நிலவும் பலதரப்பட்ட விடயங்களை முகாமையாளர்கள் பலரும் முன்வைத்தனர்.

இந்த விடயங்களில் பொது அம்சங்களாக பயிற்சிகளை மேற்கொள்வதில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாகுறைகள் குறித்தும் அதிகளவில் சுட்டிக்காட்டி பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ரீதீயாக நடத்தப்படும் பயிற்சிகள் குறித்தும் அவற்றின் செயற்பாட்டு தன்மைகள் குறித்து விபரமான அறிக்கைகளை உடனுக்குடன் தமது கவனத்துக்கு முன்வைக்குமாறும் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்புகள் குறித்த விபரங்களையும் தமது கவனத்துக்கு முன் வைக்குமாறு நைற்றாவின் தலைவர் நஸிர் அஹமட் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய பயிற்சிகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து எழுத்து மூலமாக தமது கவனத்துக்கு முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன்,

மாவட்ட இயக்குனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை இயக்குனர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.