வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 1060 முறைப்பாடுகள்

Report Print Rakesh in சமூகம்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு, கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றைத் தடுக்கும் எந்தச் சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்த போதிலும், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன.

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இன்றுவரை மொத்தமாக 1060 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குருணாகல் வைத்தியசாலையில் அவருக்கு எதிராக 827 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, தம்புள்ளை வைத்தியசாலையில் 164 முறைப்பாடுகளும், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் 69 முறைப்பாடுகளும் இதுவரையில் பதிவாகியுள்ளன.

வைத்தியர் ஷாபி சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையில், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குருணாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய வைத்தியசாலைகளில், வைத்தியர் ஷாபியிடம் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களே தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.