கல்முனையில் இரண்டாம் நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நேற்று ஆரம்பமான சாகும்வரையிலான உண்ணா விரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று காலை 9 மணியளவில் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பமாகியது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் கூடவே போராட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் 2ஆவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை மாநகர சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையைத் தேற்றும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முதலுதவிச் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.

இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என சமீபத்தில் கண்டியில் உண்ணாவிரதமிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.