காயமடைந்த யானைக்கு சிகிச்சையளித்து காட்டுக்குள் அனுப்பி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பாலமோட்டை பகுதியில், கடந்த ஐந்து தினங்களாக காலில் காயமடைந்த நிலையிலிருந்த யானைக்கு இன்று காலை கால்நடை வைத்தியரினால் சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பாலமோட்டை குளத்திற்கு அருகே கடந்த ஐந்து தினங்களாக நடக்க முடியாமலிருந்த காட்டு யானை ஒன்றினை அவதானித்த அப்பகுதி கிராம மக்கள் இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகில் சென்று யானையின் நிலைமைகளை அவதானித்தபோது யானையின் காலில் காயமடைந்து காணப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை வடபிராந்திய வனஜீவாரிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி கிரிதரன் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைக்கு சிகிச்சையளித்துள்ளார்.

யானைக்கு கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இரண்டு மணித்தியாலயமாக மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சையின் பின்னர் யானை காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.