இலங்கையிலிருந்து சுவீடனிலுள்ள கணவனுக்கு அனுப்பப்பட்ட மனைவியின் புகைப்படம்! விசாரணையில் தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

மனைவியை கொலை செய்ய கணவர், பெண்ணொருவருக்கு பணம் வழங்கிய சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சுவீடனில் கணவர் வசித்து வரும் நிலையில், மனைவி அவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மனைவி ரத்கம பிரதேசசபையின் எழுதுவிளைஞராக பணியாற்றி வருபவர் எனவும், காலி - உணவட்டுன பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னை கொலை செய்ய சிலர் திட்டமிட்டுள்ளதாக மனைவி காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் காலி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கொலை செய்வதற்காக பணத்தை பெற்றுக் கொண்ட பெண்ணும், அவருக்கு உடந்தையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், ஹோட்டல் நடத்தும் பெண்ணை மாகால்ல பிரதேசத்திற்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து, அதனை வைபர் மூலம் சுவீடனில் உள்ள கணவனுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள பெண், பாதாள உலக செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸ் என்பவரின் உறவினர் என்ற விடயமும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.