வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த சுமார் 30 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கு வீட்டுத்திட்டத்தினை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வாய்ப்புக்கள் உள்ளமையை ஆதாரப்படுத்தும் வரைபடத்தினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

நாகர் இலுப்பைக்குளம் கிராமத்தில் வாழும் சுமார் 34 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பில் நாம் பல தடவைகள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கும் தெரிவித்துள்ளோம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அதற்கும் அப்பால் வீடுகள் உள்ளவர்களுக்கும், திருமணம் செய்யாதவர்களுக்கும் கூட வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே எமக்கு வீடுகளை வழங்குங்கள் என்றே நாம் கோருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் வி.எம்.வி.குரூஸிடம் வினவிய போது,

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் வழிகாட்டலில் நடத்தப்படுவது மாதிரி வீட்டுத்திட்டம். அதில் ஆகக்குறைந்தது 15 வீடுகளாவது அமைந்திருக்க வேண்டும்.

நாங்கள் அமைச்சருடன் கதைத்ததன் அடிப்படையில் மாதிரி வீடமைப்புத்திட்டத்திற்கு மிக அண்மையில் உள்ள இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதிலும் பரவலாக உள்ள வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 142 மாதிரி வீடமைப்பு கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நடந்த 10ஆம் திகதி நாகர் இலுப்பைக்குளத்திலும் 2 மாதிரி கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டியிருந்தோம்.

இதற்கான பயனாளிகள் விபரம் பிரதேச செயலகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் நாங்கள் அதனை பார்வையிட்டு எங்களால் முடிந்தளவுக்கு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி செல்கின்றோம்.

நாகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்றைய தினம் என்னை வந்து சந்தித்தபோது முடிந்தளவு உச்சவரம்புக்கள் உள்வாங்கி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்போம் என கூறியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.