கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வன்னி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

சேவைக்காலம் கணிக்கும் போது, நியமனம் வழங்கப்பட்டு தாம் சேவையாற்றிய 3 வருடத்தை, சேர்த்து கொள்ளாது சேவைக்காலம் கணிக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களே இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு சென்ற குறித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில்,

''வடமாகாணத்தில் கடந்த 01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்ட எமது சேவைக் காலம் 01.08.2016 இல் இருந்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது சேவைக் காலம் மூன்று வருடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த யுத்த காலம் உள்ளடங்கலாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, வடமராட்சி கிழக்கு, மடு போன்ற கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 வருடத்திற்கும் மேலாக எவ்வித கொடுப்பனவுமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றிய எமக்கான நிரந்தர ஆசிரியர் நியமனம் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்தோம் என்ற காரணத்தாலும், அரசியல் காரணங்களாலும் அப்போது வழங்கப்படாது நாம் மட்டுமே புறக்கணிக்கப்பட்டிருந்தோம்.

கடந்த 2009ஆம் ஆண்டு வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது கூட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த நிலையில் செட்டிகுளம், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள் எவருக்குமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது நாம் மட்டும் தான் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தோம்.

நிரந்தர நியமனத்தில் நாம் தொடர்ந்தும் திட்டமிட்டுப் புறக்கணித்து ஒதுக்கப்படுவதை சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வலியுறுத்தி நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டம் காரணமாக கடந்த 01.07.2013 இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளையும் முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறியுள்ளோம்.

இந்த நிலையில் எமது முதல் நியமனத் திகதி 01.07.2013 என இடப்பட்ட போதிலும் தற்போது எமக்கு ஆசிரியர் சேவை தரம் 3-I வழங்கப்பட்ட 01.08.2016 திகதியிலிருந்தே எமது முதல் நியமனத் திகதியாகக் கருதி எமது சேவைக் காலத்தில் 3 வருடங்கள் குறைக்கப்பட்டு சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவேயும் வடமாகாணத்தில் நியமனம் வழங்கப்படும் போது புறக்கணிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட நாம் தற்போதும் நியமனம் கிடைத்து சேவையாற்றிய எமது சேவைக் காலத்தில் மூன்று வருடத்தைச் சேர்க்காமல் விட்டுள்ளமையால் ஆசிரியர் சேவையில் எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

முன்னைய காலங்களிலும், தற்போதும் தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சேவை தரம் 3-II என்ற நியமனமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எமக்கு மட்டுமே ஆசிரிய உதவியாளர் என்ற நியமனம் வழங்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே எமது சேவைக் காலம், வயது என்பவற்றினைக் கருத்திற்கொண்டு எமக்கு வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து எமது சேவைக் காலத்தை ஆசிரியர் சேவை தரம் 3-II ஆகக் கணித்து விடுபட்டுள்ள எமது சேவைக் காலமும் சேர்க்கப்பட ஆவன செய்யுமாறு தங்களை நம்பிக்கையோடு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers