கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசமந்தபோக்கு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்வதில்லை என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமாஜத்தின் தலைவர் திருஞானதீபம் அன்ரனி தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடிய கடற்தொழிலாளர்களின் கடற்றொழில் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து உயரதிகரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்வு பெற்று தருவதற்கு யாழ்ப்பாணம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.

எனினும் அவர்கள் யாரும் அங்கு சமூகமளிக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் முல்லைத்தீவு, அளம்பில் - கொக்குளாய் ஆகிய கடற் பகுதிகளில் 10 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் கடலில் இருந்து உழவு இயந்திரங்களின் துணையுடன் கரைவலை இழுக்கப்படுகின்றதுடன் சட்டவிரோத கடற்தொழில்கள் நடைபெறுகின்றது.

இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.