வவுனியாவிலுள்ள வெளிநாட்டு அகதிகள் தொடர்பில் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் விபரங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

படையினர், பொலிஸார் இதற்கான அனுமதியை வழங்கிய போதும் யூ.என்.எச்.சி.ஆர் அனுமதியளிக்கவில்லை எனவும், விபரங்களை பெற சென்ற ஊடகவியலாளர்களை யூ.என்.எச்.சி.ஆர் ஊடாக அனுமதி பெற்று வருமாறும் தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு இரவோடு இரவாக அழைத்து வரப்பட்டு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த அகதிகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு ஊடகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் பயனளிக்கவில்லை என தெரியவருகிறது.

எனினும் இந்த அகதிகள் நீர்கொழும்பிலிருந்த போது அவர்களை சென்று பார்வையிடவும், விபரங்களை பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers