தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் கோரிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதல்ல

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற கோரிக்கை எந்தவொரு வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்போராட்டத்துக்கு ஆதரவாக காரைதீவில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தி கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது எந்த வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பை கொடுக்க போவதே இல்லை.

ஆயினும் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டு விட்டால் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கோஷமிடுகின்றனர்.

அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பிழையான விளக்கத்தை கொடுத்து அச்சம் ஊட்டி வைத்திருக்கின்றனர். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் சுமார் 30 வருட காலமாக தரம் உயர்த்தி தரப்படாமல் கிடக்கின்றது.

இதை தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர் தரப்பினர் எப்போதோ செய்து முடித்து விட்டனர்.

இது தரம் உயர்த்தப்பட்டு விட்டது என்கின்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டியது மாத்திரமே பாக்கியாக உள்ளது.

ஆனால் காலத்துக்கு காலம் முஸ்லிம் அமைச்சர்களே இது தரம் உயர்த்தி தரப்படாமல் தடைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்திருக்கின்றனர்.

இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதற்கு வில்லனாக செயற்படுகின்றார்.

ஆனால் ஹாரிஸ் போன்றவர்களுக்கு நாம் ஒன்றை கூற வேண்டியுள்ளது. கல்முனையை ஆண்ட பரம்பரையினர் தமிழர்களே ஆவர்.

கல்முனையின் முதலாவது தலைவர் தமிழரே ஆவார். கல்முனையில் வர்த்தக நிலையங்களை நடத்தியவர்கள் தமிழர்களே ஆவர்.

கல்முனையில் தமிழர்கள் எந்தவொரு வகையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவே இல்லை. ஆனால் முஸ்லிம்களால், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் தமிழர்கள் வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களுக்கு விற்க நேர்ந்தது. முஸ்லிம் அமைச்சர்கள் கல்முனையின் எல்லைகளை திட்டமிட்டு மாற்றியதுடன் முஸ்லிம் குடியேற்றங்களையும் மேற்கொண்டனர்.

கல்முனையில் இந்து கோவில்கள், முஸ்லிம் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டன. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு காணி மற்றும் நிதி அதிகாரம் கிடையாது.

இதனால் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திடம் கையேந்த வேண்டியிருக்கின்றது. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தினர் அடிமைகளை நடத்துவதை போலவே நடந்து கொள்கின்றனர்.

ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.

இங்கு கடமையாற்றுகின்ற முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எந்தவொரு பாரபட்சத்துக்கும் உட்படுத்தப்படாமல் நீதியாகவே நடத்தப்படுகின்றனர்.

இப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது இதன் எல்லைக்கு உட்பட்ட மூவின மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கின்ற செயலாகும்.

உண்ணாவிரதம் மேற்கொள்கின்ற தேரரின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் உடனடியாக தமிழ் பிரதேச செயலகத்தை இப்போதாவதும் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோருகின்றோம்.

இதை கோருவதற்கான அருகதையும், உரிமையும் இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்துக்கு இருக்கின்றது.

நாம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்காக போராடி வருகின்றோம்.

ஆணைக்குழுக்கள் முன் ஆஜராகி சாட்சியங்கள் வழங்குகின்றோம். இப்போதும் தேரரின் உண்ணாவிரதத்துக்கு பூரண ஒத்துழைப்பு நல்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers