மன்னாரில் 473 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளுடன் நபரொருவர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் - தோட்டவெளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகளுடன் சந்தேக நபரொருவரை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 473 கிலோகிராம் 150 கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் தோட்டவெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனையிட்ட போது 15 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 473 கிலோகிராம் 150 கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டதுடன், குறித்த வீட்டில் இருந்த எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers