இனிமேல் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்கு வேட்டை நடத்த கூட்டமைப்பினர் கல்முனைக்கு வரவேண்டாம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனிமேல் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெறலாமென்று நினைத்து இங்கு வர வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

உண்ணாவிரதம் ஆரம்பித்து 24 மணிநேரம் கடந்தும் இதுவரை த.தே.கூட்டமைப்பின் தலைவரோ, செயலாளரோ யாரும் எம்முடன் தொடர்பு கொள்ளாதது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. எமது விடயத்தில் தலைவரோ, செயலாளரோ இனி மேல் தலையிட வேண்டாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா கல்முனைக்கு வந்த வேளை தேர்தல் முடிந்ததும் ஒரு மாத காலத்திற்குள் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பகிரங்கமாக கூறினார். இன்று வரை அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் எம்.பியைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். கடைசி இரண்டரை வருடங்களாவது தருவோம் என்று கூறினார்.

அந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இவர்களை இன்னமும் நம்புவதென்பது மடமை.

இது வரை காலமும் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வந்தனர். நாமும் அறியாமல் நாமும் ஏமாறி மக்களையும் ஏமாற்றினோம். இனிமேல் நாமும் மக்களும் ஏமாறத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாண்டிருப்பு அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும், தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் கல்குடாப் பிரதேசத்தில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலகத்தை எட்டெட்டாக இரண்டாகப் பிரித்து இரு பிரதேசசெயலகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் 29 கிராம சேவையாளர் பிரிவுகளையும் 49 ஆயிரத்து 682 சனத்தொகையினரையும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஏன் தரமுயர்த்த முடியாது? இதுவே எமது வினா.

மற்றுமொரு உண்ணாவிரதி மாநகரசபை உறுப்பினர் ராஜன் கூறுகையில்: கடந்த 30வருடகாலமாக இயங்கிவருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் தொடர்பில் நாம் பலதடவைகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரைச்சந்தித்து கோரிக்கைவிடுத்தோம். செய்துதருவதாக உறுதியளித்தனர்.

ஆனால் இந்தக்கணம் வரை எதுவுமே நடைபெறவில்லை. எனவே தரமுயர்த்தப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதமிருப்போம்.

எமது நீண்டகாலக் கோரிக்கையை தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் இழுத்தடித்துவந்துள்ளன. இனியும் நாம் பொறுமை காக்கத்தயாரில்லை. எனவே நாம் களத்தில் இறங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவதில் யாருக்கு பிரச்சினை? அதற்கான காரணங்கள் என்ன? சகல மக்களினதும் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யவே இத்திட்டம்.

அதில் ஒரு இனம் பாதிக்கப்பட முடியாது. எனவே அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்தி மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers