கிழக்கில் வலுப்பெறும் உண்ணாவிரதப் போராட்டம்! களத்தில் ஒன்று கூட ஆரம்பித்துள்ள மக்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக தொடர்நது வரும் நிலையில் மேலும் வலுப்பெற்று வருகிறது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், அ.விஜயரெத்தினம் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களின் உடல் நிலை மிக மோசமாகி வருவதாகவும், மருத்துவர்கள் இடையிடையே வந்து பரிசோதனை செய்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் வி.இ.கமலராஜன், காரைதீவுபிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் களத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் கல்முனை பொதுப்பிரமுகர்கள், இளைஞர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட மக்கள் பலரும் ஒன்று கூட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நாடு ஜனநாயக நாடு. நல்லிணக்கம் நிலவுகிறது. நல்லாட்சி நடக்கிறது என்கிறார்கள். ஆனால் இந்த ஜனநாயகம் தமிழருக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது ஏன்? என காரைதீவு உண்ணாவிரதி தவிசாளர் ஜெயசிறில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Offers