கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காரைதீவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அதற்கு ஆதரவு தெரிவித்து காரைதீவில் இன்று நண்பகல் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உண்ணாவிரதப் போராட்டம் காரைதீவு விபுலாநந்த சதுக்க முச்சந்தியில் அரசடிப்பிள்ளையார் ஆலயமருகே அரச மர நிழலில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் முதற்கட்டமாக தவிசாளர் கே.ஜெயசிறிலுடன் சபை உறுப்பினர்களான மு.காண்டீபன், த.மோகனதாஸ், இ.மோகன், ஆ.பூபாலரெத்தினம், சி.ஜெயராணி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு அமைப்பாளரும், முன்னாள் உப தவிசாளருமான வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சபையிலுள்ள 7 உறுப்பினர்களுள் த.தே.கூட்டமைப்பு உறுப்பினரான எஸ்.நேசராசா இப்போராட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை இவ்வுண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருக்கோவில் பிரதேசத்தில் நாளை முதல் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக பிரதேசசபைத்தவிசாளர் வி.இ.கமலராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் சகல தமிழ்ப்பகுதிகளிலும் ஆதரவு தெரிவித்து சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers