30 வருட கால கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு

Report Print Sumi in சமூகம்

கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த கோரி, முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டக்காரர்களின் 30 வருட கால கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ. .கு.வை.க. வைத்தீஸ்வரகுருக்கள் மற்றும் செயலாளர், பிரம்மஸ்ரீ. கே. சந்திரசேகர சர்மா ஆகியோரினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி 17.06.2019 இல் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை சர்வமத தலைவர்களான கல்முனை சுபத்ராமய விகாராதிபதி வண. ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு இந்துக் குருமார் ஒன்றிய தலைவர், கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு. சச்சிதானந்த குருக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகர் ராஜன், ஆ.விஜயரெத்தினம் ஆகியோர் ஆரம்பித்தனர்.

பின்னர் பல பொது மக்களும், மத தலைவர்களும் இதில் இணைந்து, தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

1993.07.28ம் திகதி உப பிரதேசங்கள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டது. அதில் 28 பிரதேச செயலகமாக தரமுயர்ந்து காணப்படுகின்றது. ஆனால், கல்முனை பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாமல் உள்ளது. தமிழ் மக்களின் 30 வருட நெடுநாள் கோரிக்கையே இன்று உண்ணாவிரதமாக பரிணமித்துள்ளது.

காலம் தோறும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம் இது தொடர்பாக, பல கோரிக்கைகள் முன்வைத்த போதும், எந்தவித பயனுமற்று நம்பிக்கை இழந்து இறுதியில் மக்கள் அறப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எனவே, இவை தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளது.

ஆகையினால், கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் உடனடியாக உரிய தீர்வினை வழங்க வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பினர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers