மறுபிறவி எடுத்துள்ள சஹ்ரான்! வெளியான செய்திகளில் உண்மையில்லை

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவருக்கு சஹ்ரான் குழந்தையாக பிறந்துள்ளதாக தாதியொருவர் கூறியுள்ள சம்பவம் வதந்தி என தெரியவந்துள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க வைத்தியசாலைக்கு வந்த உறவினர், தாதியொருவரிடம் பிரசவம் குறித்து விசாரிக்க, “ஒரு சஹ்ரான் பிறந்திருக்கிறார்“ என தாதி கூறியுள்ளார்.

இந்நிலையில் தாதியை அந்த நபர் அறைந்ததாகவும், தாதி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வதந்தி குறித்து கல்முனை பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளதையடுத்து கல்முனை பொலிஸாரும் தாதியொருவரை கைது செய்யவில்லையென கூறியுள்ளனர்.

எமது வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடி தீர்வை பெறவுள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு இனமுரண்பாடுகளை தோற்றுவிக்க முனைவதில் அனைத்து இன மக்களும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளது.

இச்சம்பவம் போலியாக சோடிக்கப்பட்டு, காழ்ப்புணர்ச்சியின் மூலம் எமது வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லையென கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக தெரிவிக்கின்றேன்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத சில விசமிகள் தங்களது சமூகவலைத்தளங்களின் மூலம் சேறுபூசும் செயற்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

சில இனவாதிகள் இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க தூபமிடும் வகையிலும் இனவாத சமூகவலைத்தளங்களில் வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

மேலும், இதனை கண்டித்து நாளை சில தாதியர் சங்கங்கள் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளனர்.

எந்த ஒரு அசம்பாவிதங்களும் எமது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவில்லையென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் அவதூறுகளை பரப்பியவர்களுக்கு எதிராக. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.