கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Report Print Suman Suman in சமூகம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி ஏ9 வீதிக்கு அருகில் நின்று கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் கூறுகையில்,

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 859 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எமக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ரணில், மைத்திரி, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் இது தொடர்பாக அறிவித்தும் எந்த பயனும் எமக்கு கிடைக்கவில்லை.

அத்துடன் மைத்திரி, கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டபோது நாங்கள் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

அப்போது அவர் எமக்கு தீர்வு தருவதாக கூறி எங்களை கொழும்பு வர சொன்னார். நாம் அங்கு சென்றோம், அப்போதும் எமக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அத்துடன், ஐ.நா சபை கூட்டம் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றது. அந்த கூட்டத்தொடருக்கு எமது உறவுகள் எவருமே இந்த தடவை செல்லவில்லை.

ஏன் நாங்கள் இதை குறிப்பிடுகின்றோம் என்றால் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள், பிரதிநிதிகள் உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் எமது உறவுகள் எவரும் அங்கு செல்லவில்லை என்பதை புலன்பெயர் உறவுகளுக்கு கூறிக்கொள்கிறோம்.

அத்துடன் நாம் எமது பிரதிநிதிகள் எவரையும் இந்தமுறை அங்கு அனுப்பவில்லை. ஏன் என்றால் எமது கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருட காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.