கொழும்பு சென்று பதிவுகளை மேற்கொண்ட எமது பெயர் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கிடைக்கவில்லை

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். பல்கலைக்கழக வேலை வாய்ப்பிற்காக பல தடவைகள் ஒவ்வொரு புதிய உயர்கல்வி அமைச்சரும் மாற்றமடைய கொழும்பு சென்று உயர் கல்வி அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் தமது பெயர்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எவ்வித காரணங்களும் கூறப்படவில்லை என உயர்கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட பட்டியலில் பெயர் விபரங்கள் இடம்பெறாது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினர்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கடிதத்தில்,

நாங்கள் தற்போது இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கல்விசாரா பணியாளர்களாக பணியாற்ற நுழையும் வழிமுறையான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் 876இன் அடிப்படையில் எமது சுயவிபரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுக் கடிதத்தினையும் எடுத்துச் சென்று உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து, யாழ்.பல்கலைக்கழகத்தில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உயர் கல்வி அமைச்சினால் அண்மையில் அனுப்பப்பட்ட பட்டியலில் பெயர் விபரங்கள் இடம்பெறாது பாதிக்கப்பட்டவர்கள் ஆவோம்.

பாதிக்கப்பட்டவர்களாகிய எம்மில்,

1. யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பணியிடங்களிற்கான வெற்றிடங்களினால் ஏற்படுகின்ற மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிளிநொச்சி வளாகத்தில் ஏறத்தாள 50இற்கு மேற்பட்டவர்களும், யாழ்.பிரதான வளாகத்தில் ஏறத்தாள 30இற்கு மேற்பட்டவர்களும் பல்கலைக்கழகத்தினால் தனியார் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் இங்கு பணியாற்றுவோரும் அடங்கும்.

இங்கு நாங்கள் தனியே ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை. காலத்திற்குக் காலம் இங்கு ஒப்பந்த நிறுவனங்கள் மாறினாலும் பணியாளர்களாகிய நாங்கள் எதுவிதமாற்றமுமின்றி இங்கு பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எமது வருகை மற்றும் மீள்செல்லும் நேரங்கள் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள வரவுபதியும் முறைகள் மூலம் (முன்னர் கையொப்ப பதிவேடு, தற்போது கைவிரலடையாள இயந்திரம்) பல்கலைக்கழகத்தினாலேயே மேற்கொள்ளவும் பராமரிக்கவும்படுகின்றன.

மேலும் எமக்கான விடுப்புக்களும் பல்கலைக்கழகதுறைத் தலைவர்களாலேயே வழங்கப்படுகின்றன. எங்களில் சிலர் யாழ்.பல்கலையில் 3½வருடங்கள் வரை பணி புரிந்தும் உள்ளோம்.

2. யாழ்.பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டதாரிகளாக வெளியேறியவர்களும், அரசின் வேறு தொழிற் பயிற்சி நிறுவனங்களான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை, உயர்தொழில் நுட்பவியல் நிறுவனம், தொழிநுட்பக் கல்லூரி போன்றவற்றில் தொழில் சார் கற்கைகளை பயின்றவர்களும் தொழிற் பயிற்சிக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் 06 மாதங்கள், 01 வருடங்கள் மற்றும் அதற்கு கூடிய காலப்பகுதிகள் பட்டதாரிப் பயிலுநர்களாக அல்லது பயிலுநர்களாக பணியாற்றியவர்களும் உள்ளோம்.

3. ஏதோ ஒரு வகையில் அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா பணியிடங்களின் வெற்றிடங்களினை நிரப்ப பல்வேறுபட்ட தரங்களில் பல்வேறுபட்ட தகமைகளுடன் முயற்சிப்பவர்களும் உள்ளோம்.

நாங்கள் யாழ்.பல்கலைக்கழக வேலை வாய்ப்பிற்காக ஒரு தடவை மட்டுமல்ல இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஒவ்வொரு புதிய உயர்கல்வி அமைச்சரும் மாற்றமடைய மாற்றமடைய கொழும்பு சென்று உயர்கல்வி அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆயினும் தற்போது வந்துள்ள உயர்கல்வி அமைச்சின் பெயர்ப்பட்டியலில் எங்களது பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப்பட்டியல் பொதுவெளியில் பார்வைக்குவைக்கப்படவும் இல்லை. எங்களை எந்தவொரு பதவிக்கும் எழுத்துப் பரீட்சைக்கோ நேர்முகப் பரீட்சைக்கோ யாழ்.பல்கலைக்கழகம் அழைக்கவுமில்லை.

வேலைவாய்ப்பிற்காக உயர்கல்வி அமைச்சில் உரிய முறையில் பதிவுகளை மேற்கொண்ட எங்களது பெயர்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எவ்வித காரணங்களும் கூறப்படவும் இல்லை.

எனவே இது ஒருசாராருக்கு இழைக்கப்படுகின்ற வெளிப்படையான அநீதியாகும்.

எனவே பல்கலைக்கழக உயர்சபையாகிய பேரவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களான தாங்கள் எங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஆவணம் செய்யுமாறு விநயமாக வேண்டிநிற்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.