மூடப்படும் நிலையில் வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடகிழக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் 1991 ஆம் ஆண்டு வடபகுதியில் வவுனியா நகரை அண்மித்து தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியின் பக்கமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட அரச விதை உற்பத்திப்பண்ணை அரச முற்பணக்கணக்கில் இயங்கி வருகிறது.

வடக்கு மாகாணம் தனியாக்கப்பட்டதன் பின்னர் குறித்த பண்ணை வடமாகாண சபையின் கீழ் விவசாய அமைச்சின் கீழ், மாகாண விவசாயப்பணிப்பாளர் ஆழுகைக்குட்பட்டு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனை - வவுனியா ஊடாக இயங்கி வருகிறது.

வருமானத்தை நோக்கமாகக் கெண்டு இயக்கப்படும் இந்தப்பண்ணை மானாவாரி நெற்செய்கை காணியாக 5 ஏக்கர், வவுனியா குளத்தின் கீழ் நீர்ப்பாசன வயல் காணி 27 ஏக்கர், நீர்ப்பாசனத்திற்குட்பட்ட மேட்டு காணி 10 ஏக்கர், மேட்டு நிலம் 16 ஏக்கர் உள்ளடங்கலாக தற்போது 68.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகின்றது.

வவுனியா நகரம், நகர அபிவிருத்தியில் இட அமைவு காரணமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் நிலையில் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைக்காக பஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் (புதிய பேருந்து நிலையம்) 2009ஆம் ஆண்டு பஸ் நிலையம் அமைப்பதற்காக பண்ணைக்குரிய 3 ஏக்கர் காணி வவுனியா நகரசபைக்கு பாரப்படுத்தப்பட்டது. அத்துடன் மேலும் ஒரு ஏக்கர் நிலம் தற்போது நகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகர அபிருத்திக்காக காணிக்கான கேள்வி அதிகரித்த நிலையில் ஏ 9 வீதியின் நீண்ட பகுதி அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு செந்தமாக காணப்படுவதால் அத்தகைய நிலத்தை கையகப்படுத்தி வர்த்தக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயன்றுவரும் நிலையில் மாகாண ஆளுகைக்குட்பட்ட அரச வருமான நிறுவனம் ஒன்றை இல்லாமல் செய்து அந்த நிலத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விவசாயத்துறை சார்ந்த சில அதிகாரிகள் முயன்று தற்போது வரை அவ்வாறான கையகப்படுத்தல் நடவடிக்கையை தடுத்து பண்ணையை இயக்குவதில் பங்காற்றி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்திற்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மரக்கறிக்கன்று உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, பழப்பயிர் உற்பத்தி, உப உணவு பயிர் உற்பத்தி, நல்லின விதை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவரும் குறித்த பண்ணை அரச வருமானத்துறையில் கணிசமான பங்கை ஆற்றிவருகிறது.

அத்துடன் 20 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள், 20 க்கும் பேற்பட்ட பருவகால ஊழியர்களுக்கும் தொழில் வழங்கும் நிறுவனமாகவும் இந்தப் பண்ணை செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறு இயங்கிவரும் பண்ணையில் சில வருடங்களாகப் பணியாற்றிவரும் பண்ணை முகாமையாளர்களது முறைகேடான நடடிக்கைகளும் அவர்களுக்கு சார்பாக மேல் மட்ட அதிகாரிகள் செயற்படும் விதமும் அரவ வருமான நிறுவனம் ஒன்றை இழுத்து மூடுமளவிற்கு கொண்டுவந்துள்ளது.

நீண்ட காலமாகவே பண்ணையின் வருமானம் குறைவாகவும் பண்ணை நட்டத்திலே இயங்குவதாகவும் ஆண்டுக் கணக்கறிக்கைகள் காட்டியபோதும் அதுகுறித்து கணக்காய்வுகள் சீராகச் செய்யப்படாது, இருட்டடிப்புச் செய்யப்பட்ட நிலையில், பண்ணை ஊழியர்களுக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமான ஊழல் மோசடிகள் சம்பந்தமான பல தகவல்கள் 2018 ஆம் ஆண்டு வெளிவரத் தொடங்கின.

பண்ணை பணியாளர்களை மேற்கோள் காட்டி ஊழல் குறித்த தகவல்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சில விசாரணைகளும், பக்கச்சார்பான நடவடிக்கைகளும் காரணமான பண்ணையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக உண்மை கண்டறியப்படாமல் பண்ணையை தொடர்ந்து இயக்குவதில் பெரும் இடர்களை நிர்வாகத்தரப்பு எதிர்நோக்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் பண்ணை முகாமையாளராகப் பொறுப்பேற்ற விவசாயப் போதனாசிரியர் ஒருவர், தனக்கு சார்பாக பணியாட்களைத் தயார்ப்படுத்தி, பணக்கையாடல்களை மேற்கொண்டுள்ளார் என்று அந்தப்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களே தெரிவித்த நிலையில், வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனை நிர்வாகிகள் உள்ளக ஆய்வு குழுவை உருவாக்கி ஆய்வு நடத்தியபோது, பல குறைபாடுகள் பண்ணையில் காணப்படுவதையும், முறைகேடு நடைபெற்றமைக்கான ஆதாரங்களையும் இனங்கண்டு அறிக்கைப்படுத்தி மாகாண பணிப்பாளருக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

நெல் உற்பத்தியில் காணப்பட்ட வினைத்திறனற்ற விளைச்சல், பன்றி வளர்ப்பில் காணப்பட்ட குறைபாடுகள், பப்பாசி கன்று உற்பத்தியில் காணப்பட்ட முளைதிறன் குறைகாடுகள் , பால் உற்பத்தியில் காணப்பட்ட குறைபாடுகள், புத்தக மீதிகளுக்கு மேலதிகமாக பதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் என பல்வேறு குறைபாடுகள் இந்த குழு மூலம் வெளிப்டுத்தப்பட்டு, அது குறித்து தலைமை அதிகாரிக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதங்கு மேலதிகமாக மாகாண கணக்காய்வு அதிகாரிகளின் விசாரணையிலும் இதேபோன்ற முக்கிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு கணக்காய்வு ஐயவினாக்களும் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த விடயங்கள் குறித்து கருத்திலெடுக்காத மாகாண பணிமனை நிர்வாகிகள், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பணியாளர்களை பாதுகாத்து இடமாற்றம் வழங்கியதுடன் பின்னர் நியமிக்கப்பட்ட ஊழியர்களை சீராகப்பணியாற்றவும், உற்பத்தி மற்றும் வருமான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் தடையாகச் செயற்பட்டு வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு தொடர, பின்வந்த நிவாகத்தின்மீதும் தற்போது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பாகவும் கணக்காய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்காண்டுவரப்பட்டுள்ளன.

அரச நிறுனம் ஒன்றின்மீது பலவருடங்களாக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் முறைப்படி ஆராயாது, நாடவடிக்கை மேற்கொள்ளாது, அரச அதிகாரிகளே தங்களுக்குள் அடிபட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

இந்த நிலைமை தொடர்ந்தால் குறித்த பண்ணையை இழுத்து மூடவேண்டிய நிலையே ஏற்படும். இது வடமாகாண நிர்வாக வினைத்திறனின்மையையே வெளிப்படுத்தும். இந்த பரிதாப நிலைகுறித்து இனியாவது அரச உயர்மட்டம் சிந்தித்து செயற்பட வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.