கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமைக்கு முதல் நியமிப்பதாக அமைச்சர்கள் முதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை உண்ணாவிரதிகளுக்கு உறுதிமொழியளித்திருந்த போதிலும் இதுவரை கணக்காளர் நியமிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் மிகுந்த கவலையுடன் ஏமாற்றமடைந்துள்ளனர். உள்நாட்டு மாகாணசபைகள் அமைச்சரின் ஊடக அறிக்கையின் படி கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இருந்தது. அதனை அமைச்சர்களான மனோகணேசன், தயாகமகே போன்றோர் மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமைக்கு இடையில் கணக்காளர் நியமிக்கப்படாவிட்டால் தனது தலைமை கட்சி பதவி பற்றி மீள்பரிசீலனை எடுக்கவேண்டிவரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் அங்கு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது பற்றி அமைச்சர் மனோகணேசனுடன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை கணக்காளரொருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜூடன் தொடர்பு கொண்டபோதும் பயனளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காளர் விடயத்திலேயே இவ்வாறு மெத்தனப்போக்கைக் காட்டும் அரசாங்கம் எமக்கான தீர்வு விடயத்திலும் இவ்வாறு தான் நடந்துகொள்ளுமா? என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.