அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட பூசை வழிபாடு

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணியினால் இன்று விசேட பூசை வழிபாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 24ம் திகதி ஐ .நா மனிதவுரிமைகள் சபையின் இவ்வாண்டுக்கான 2வது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தமது போராட்டத்துக்கான நீதியை கோரும் வகையிலும், பல வருடங்களாக வீதியில் நீதி கேட்டு போராடும் தம்மை இலங்கை அரசு கைவிட்டுவிட்டதை ஞாபகம் ஊட்டும் வகையிலும், இந்த விசேட தேங்காய் உடைக்கும் பூசை ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சங்கத்தின் தலைவி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றி எமது குறைகளை இறைவனிடம் மன்றாடும் வகையில் அதன் மூலமாக எமது உறவுகளை பெற்றுக்கொள்ளலாம் எனும் நோக்கில் இவ்விசேட தேங்காய் உடைக்கும் பூசை ஒன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தோம்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் பின்னர் இன்றிலிருந்து எமது போராட்டம் மாதாந்தம் 30 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் சென்றுள்ள நிலையில் ஏன் எமது உறவுகளை தேடிக்கண்டு பிடிக்கும் வசதிகளை செய்யவில்லை.

அவர்களுக்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியாகவுள்ளது இந்த இலங்கை அரசாங்கம் சகலரையும் ஒன்றாக பாராமுகம் காட்டாமல் சரி சமமாக பார்க்க வேண்டும்.

அத்துடன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 41 வது அமர்வில் யுத்தக்குற்றம் தொடர்பாகவும், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணை செய்து ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.