காட்டுப்பாதையை திறந்துவைத்தது அமைச்சரா? அரசஅதிபரா? இந்து அமைப்புகள் போர்க்கொடி

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கதிர்காம ஆடிவேல்விழாவிற்கு பாதயாத்திரையாகச் செல்லும் அடியார்களுக்கான இந்தவருட காட்டுப்பாதையை திறந்துவைத்தது அமைச்சர் மனோ கணேசனா அல்லது அரசாங்க அதிபரா என்பதில் சர்ச்சை நிலவுகிறது.

அமைச்சர் திறக்கமுன்பே அரசாங்க அதிபர் குறித்த நுழைவாயிலைத் திறந்துவைத்துள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

காலகாலமாக இந்த நுழைவாயில் அதிதிகள் அனைவரும் சேர்ந்து ஒரே வேளையில் ஆலய பிரதமகுரு முன்னிலையில் திறந்துவைப்பது வழக்கம். இந்நிலையில் இம்முறை அதற்கென்று கொழும்பிலிருந்து வந்த அமைச்சர் குழாம்

மற்றும் குருக்கள் வரமுன்பே இந்நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது தொடர்பில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

கதிர்காமத்தைப்போல் இந்த ஆலயத்தையும் பாதயாத்திரையையும் பௌத்தமயமாக்குவதற்கான முன்னோடி செயற்பாடா என பாண்டிருப்பு இந்துபேரவை தலைவர் அ.விஜயரெத்தினம் கேள்வியெழுப்புகிறார்.

குறித்த காட்டுப்பாதை நேற்றுமுன்தினம்(27) வியாழக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

பிரஸ்தாப காட்டுப்பாதையைத்திறக்க அமைச்சர் மனோகணேசன் தனது பாராளுமன்றஉறுப்பினர் வேலுகுமார் குழுவினருடன் பாராளுமன்றஉறுப்பினர் கவி.கோடீஸ்வரன் ஒருமாதத்திற்கு முன்னர் விடுத்த வேண்டுகோளையேற்று அதிகாலையில் சமூகமளித்திருந்தார்.

அமைச்சர் மனோகணேசன் இவ்வருட பாதையைத்திறக்கவேண்டுமென்பதற்காகவே கொழும்பிலிருந்து வருகைதந்திருந்தார் என்பதனை கோடிட்டுக்காட்டலாம்.வரலாற்றில் இந்துகலாசார அமைச்சர் ஒருவர் இக்காட்டுப்பாதை திறப்பிற்கு வருகை தந்ததென்றால் இதுவே முதற்றடவையாகும்.

அதற்கு முன்னதாக வழமைபோல உகந்தமலை முருகனாலயத்தில் விசேடபூஜை ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களினால் நிகழ்த்தப்பட்டு அருளாசியும் வழங்கப்பட்டது.

அந்தப்பூஜையில் தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள் சமுகமேம்பாடு இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் கு அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன் அ.வேலுகுமார் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் மேலதிக அரசாங்கஅதிபர் வெ.ஜெகதீசன் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பூஜை முடிந்து வழமைபோல அமைச்சர் மற்றும் குழாத்தினர் ஆலயகுரு வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க சகிதம் காட்டுப்பாதை திறக்கும் நுழைவாயிலை நோக்கிச்சென்றார்கள்.

அங்கு சென்றவேளை பாதை 10நிமிடங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டு அடியார்கள் ஆயிரக்கணக்கில் பயணித்துக்கொண்டிருந்ததைக்காணமுடிந்தது.

இருந்தபோதிலும் அமைச்சர் குழாம் மீண்டும் அந்த நுழைவாயிலை மூடித்திறந்துவைத்தனர்.

எனினும் பின்னர் இருதரப்பினரும் இணைந்து அடியார்களைச்சந்திந்து பின்னர் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.