சஹ்ரானையும் வைத்தியசாலையையும் இணைத்து போலிச் செய்தி வெளியிட்டவர்கள் மீது வலைவீச்சு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

ஜ.எஸ்.ஜ.எஸ்.பயங்கரவாதி சஹ்ரானின் பெயரை கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பொய்ச்செய்தி வெளியிட்டு பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுமார் 18பேரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

இனவாதத்தையும் இனமுரண்பாட்டையும் தோற்றுவிக்கும் நோக்கிலும் வைத்தியசாலைக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலும் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக கூறி போலிச் செய்தியை வெளியிட்டதாக கல்முனை ஆதாரவைத்தியசாலை நிர்வாகம் நேற்று கல்முனை பொலிஸ் நிலையத்திலும் சி.ஜ.டி.யினரிடமும் எழுத்துமூல முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளது.

மேலும் சுகாதார அமைச்சிற்கும் தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கும் முறையிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இருதரப்பினரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வலை விரித்துள்ளது. இன்றோ நாளையோ அவர்கள் கைது செய்யப்படலாமெனத் தெரியவருகிறது.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதிக்கு இறங்கவிருப்பதாக ஊழியர்கள் கூறுகின்ற அதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிப்போம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவும் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் முஸ்லிம் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தை சஹ்ரான் போலிருப்பதாக தாதிய உத்தியோகத்தர் சொன்னதாகவும், அவருக்கு குழந்தையின் தந்தை அடித்ததாகவும் இதனையறிந்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த தாதிய உத்தியோகத்தரை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

அப்படி அங்கு ஒரு சம்பவம் நடக்கவில்லையெனவும் அப்படி எந்த தாதிய உத்தியோகத்தரை இடைநிறுத்தவும் இல்லையெனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட அந்தச்செய்தி பொய்யானது எனவும் போலியானது எனவும் கூறி முறைப்பாட்டைத் தொடர்ந்துள்ளது.

இந்தப்போலிச் செய்தியை வெளியிட்டவர்கள் பரப்பியவர்கள் என்ற போர்வையில் சுமார்18பேரின் பெயர்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பங்கரவாதத்துடன் தொடர்புடைய போலிஇணைய சமுகவலைத்தர முறைப்பாட்டுப்பிரிவுக்கும் இன்று முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Latest Offers