சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு போதியளவு நீர் உண்டு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு போதியளவு நீர் இருப்பதாக பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கு உரிய முறையில் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் தங்களுடைய பயிர்கள் அழிவடையும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக, வவுனிக்குளத்தின் கீழுள்ள செல்வபுரம் முதலாம் வாய்க்கால், இரண்டாம் வாய்க்கால், போன்ற பகுதிகளில் பெருமளவான வயல் நிலங்கள் நீர் விநியோகம் இன்றி கருகிய நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை பொன்னகர், கரும்புள்ளியான், போன்ற பகுதிகளிலும் இவ்வாறு நீர் இன்றி கருகிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட அளவைவிட, அதிகளவான நிலப்பரப்பில் இப்பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளதால் இவ்வாறு நீர் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.

சிறுபோகச்செய்கைக்கு உரிய முறையில் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் நீர்விநியோகிக்கும் உத்தியோகத்தர் குறிப்பிட்ட சில பகுதிகளில் பாரபட்சமாக நடந்து கொள்வதாலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

குறித்த உத்தியோகத்தரை இடமாற்றம் செய்து வேறு ஒரு உத்தியோகத்தரை நியமிக்குமாறு 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கையொப்பிட்ட கடிதத்தினை நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் வழங்கவுள்ளனர்.

இது தொடர்பில் வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களம் கருத்து தெரிவிக்கையில்,

வவுனிக்குளத்தில் 6060 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டாலும் குளத்தின் அளவைக்கொண்டு இம்முறை 3400 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மேலதிக விதைப்புக்கள் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களமே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குளத்தில் இருக்கின்ற நீர் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருந்தாலும் தற்போதைய வெப்பம் காற்று காரணமாக நீரின் ஆவியாதல் தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.

விவசாயிகளும் நீரைச்சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட திணைக்களம், உத்தியோகத்தர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்குமிடத்துஅதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.