மரண தண்டனை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை

Report Print Jeslin Jeslin in சமூகம்

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பில் இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ அல்லது நீதி அமைச்சோ இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை நீதி அமைச்சு அனுப்பியுள்ளது. அதில் நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இருப்பினும், தூக்கிலிடப்படும் நான்கு குற்றவாளிகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்து எங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தூக்கிலிடுபவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் நியமனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள போதும், இன்னமும் அவர்கள் பணியில் இணைந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே உள்ள தூக்குக் கயிறு நல்ல நிலையிலேயே இருப்பதால், வெளிநாட்டில் இருந்து புதிய தூக்குக் கயிறு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.