வவுனியாவில் வாகனங்களை வழிமறித்து போராட்டம் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வாகனங்களை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா - மன்னார் பிரதான வீதி, பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி இன்று காலை இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள், குறித்த வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் பல போராட்டங்களை மேற்கொண்டும் எவ்வித நடவடிக்கையும் இன்று வரையிலும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆட்சியாளர்களே செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியை உடனடியாக புனரமைத்துக்கொடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழியேற்படுத்திக் கொடு, எமது பிரதேசத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை மரணப் பொறியில் தள்ளாதே, நாம் இருப்பது வரிப்பணம் செலுத்துவதற்கு மட்டுமா?, அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் எமக்குப் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லை போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி வீதியூடான போக்குவரத்து சற்றுத் தடைப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எச். உபாலி சமரசிங்கவிடமும், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் பொதுமக்கள் தமது மகஜரினைக் கையளித்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.