மாணவ குழு மோதல்! சிகிச்சை பெற்ற மாணவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறினர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஏழு பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறிய மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட மாணவர்கள் எனவும் கடந்த செவ்வாய்கிழமை(2) இரவு சுமார் ஒன்பது மணியளவில் குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் முடிவு தொடர்பாக எழுந்த பிரச்சினை ஒன்றை அடுத்தே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் குறைந்த பட்சம் 7 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்பு மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த செய்தியை சேகரித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவர்கள் என கூறப்படும் சிலரால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவர் குழு சண்டித்தனமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதோடு இஸ்லாமிய பீட மாணவர்கள் எவரும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் வாதிட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த கைகலப்பில் ஈடுபட்ட சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய பீட மாணவர்கள் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்கலைக்கழக நிர்வாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களான ஏ.எல். அப்துல் ரஹ்மான், என்.எம். றஸ்லி, எம்.எல். ஆசிக்கான், எம்.என். ஹஸ்னி அஹமட், எம்.என்.எம். மாசின் ,எம்.எஸ். முனீஸ், எம்.எம்.எம். சுக்ரி, ஆகியோர் சிகிச்சையின் பின்னர் வெளியேறி சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களாவர்.

இதேவேளை பல்கலைக்கழக நிருவாகத்தினருக்குத் தெரியாமலேயே மேற்படி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

மேலும் எதிராளியை கைது செய்ய வைப்பதற்காகவும் தாங்கள் கைதாகுவதிலிருந்து தப்பிப்பதற்காகவும் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது போன்று பல்கலைக்கழக மாணவர்களும் தொடங்கி விட்டார்களோ என்கிற சந்தேகமும் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கள மாணவர்களை அதிகமாக கொண்ட ஏனைய பீடங்களுக்கான மாணவர் யூனியன் நிருவாகங்கள் தேர்தலின்றி ஏகமனதான தெரிவுகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. ஆனால் நூறுவீதம் இஸ்லாமியர்களைக் கொண்டதும்

மக்களுக்கு நல்லுபதேசம் செய்கின்ற மௌலவிமார்களை கொண்டதுமான இஸ்லாமிய அரபு மொழி பீடத்தில் மட்டும் தேர்தலின்றி யூனியனை தெரிவு செய்யும் மனச்சாட்சி இருக்கவில்லை.

எந்தவித பிரயோசனமும் இல்லாத அற்ப பதவிகளுக்காக எமது இஸ்லாமிய மாணவர்கள் வரிந்துகட்டிக் கொண்டும் அவர்களுக்கிடையில் தகாத வார்த்தைகளினால் வசைபாடிக் கொண்டும் வாக்கெடுப்பு வரைக்கும் சென்றதோடு இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டதானது மிகவும் வெக்கக்கேடான செயலாகும் என கல்வியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் அடாவடி சண்டையில் ஈடுபட்டமை நிருவாகத்துக்கு தெரியப்படுத்தாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சம்பவத்தினை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை மிரட்டியமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிருவாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்லாமிய பீடம் ஆகியவற்றின் மதிப்புக்கு குந்தகத்தினையும் அங்குள்ள மாணவர்களின் கௌரவத்துக்கு இழுக்கினையும் இவ்வாறான மாணவர்களே ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே கடந்த செவ்வாய்கிழமை இரவு அடாவடி சண்டையில் ஈடுபட்ட இஸ்லாமிய பீட மாணவர்கள் அனைவரையும் நிருவாகத்தினர் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் இவ்வாறு குழு மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களை கல்விச் செயற்பாடுகளிலிருந்து நிருவாகத்தினர் இடைநிறுத்தியமை போன்று இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மேற்படி அடாவடி மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதே நியாயமாகவும் அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.