தமிழ் மக்களின் அடையாளங்களுக்காக குரல் கொடுக்க நாங்கள் தயார்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களை இனரீதியாக, மதரீதியாக அடையாளங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் தென்னவன் மரவாடி முருகன் ஆலயம் ஆகியவற்றிற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடமாகாணத்தின் பிரதிநிதிகள் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய பூமியில் இருந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களாகிய நாங்கள் ஒன்று பட்டு ஒரே குரலில் நின்றால் தான் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியும்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லப்பட்ட 48 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சிங்கள பௌத்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தமிழர் தாயகம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தாலும், கலை ,கலாச்சார, மத, சின்னங்களை அழிக்கும் நடவடிக்கையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஆண்டாண்டு காலமாக தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் தமிழர் வரலாற்றினை மாற்றி அமைக்ககூடிய வகையில் ஈடுபட்டு வருகின்றார்கள். பல திணைக்களங்கள் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றன.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் பெரிய பிரச்சினையாக ஆலயத்தினை புனரமைக்க முடியாதவாறு பௌத்த மதகுருக்கள் தடையாக இருந்தனர்.

வெளி இடங்களில் இருந்து மதகுருக்கள் அழைத்துவரப்படும் சிங்கள பௌத்தர்களை வைத்துக்கொண்டு அச்சுறுத்துவதற்கும், இதனை காப்பாற்றுவதற்காக முன்னாள் படையினரும் முகாம் அமைத்து நடவடிக்கைககள் எடுத்து வருகின்றார்கள்.

இதேபோல் கிழக்கு மாகாணத்தின் எல்லையில் இருக்கின்ற தென்னவன் மரவாடி கிராமத்தில் மலையில் இருக்கின்ற முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கும் அதனை புனரமைப்பதற்கும் தடைகள் விதிக்கப்பட்டு அதிலும் படையினரின் காவலரண் அமைக்கப்பட்டுள்ளன அங்கும் நாங்கள் சென்று பார்வையிடுகின்றோம்.

இவ்வாறான அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களை இனரீதியாக, மதரீதியாக அடையாளங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு எழுவார்களாக இருந்தால் அரசின் முயற்சிகளை நிச்சயமாக முறியடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபாகுகதாஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் ஆலயத்திற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.