வவுனியாவில் கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பு: வீட்டுத்திட்ட பயனாளிகள் அவதி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பினாலும் தர நிர்ணயம் இன்மையினாலும் வீட்டுத்திட்ட பயனாளிகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபாவிற்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கடிதத்தில்,

நீண்டகாலம் இடம்யர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண விருத்தி தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தில் 671 வீடுகளுக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்ற வண்ணமுள்ளது.

இருப்பினும் கட்டுமானப் பொருட்கள் வெவ்வேறு விலைகளிலும் வெவ்வேறு தரத்திலும் விற்கப்பட்டு வருகின்றது. இவற்றின் தரங்கள் மிகக்குறைவாக உள்ளன.

மீள்குடியேறிய வறுமைப்பட்ட மக்கள் தங்களது வீட்டினை தங்களால் வழங்கப்பட்ட சரியான மதிப்பீட்டுக்குள் கட்டி முடிப்பதற்கு கட்டிடப் பொருட்களின் சரியான விலையும் தரமும் அவசியமானதாக உள்ளது.

எனவே பொருட்களின் விலை மற்றும் அவற்றின் தரத்தினை சரியாக நடைறைப்படுத்துவதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதாக பிரதேச செயலாளர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுமானப்பொருட்களின் விலைகள் இடத் தரகர்களின் மூலமாக அதிகரித்துள்ளதாக வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.