வெள்ளையர்களையே அன்று விரட்டியடித்த மண்! கண்டி வாழ் தமிழர்கள் என்றும் துணைபோகமாட்டார்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்தி புரட்சி அசுர வேகத்தில் அரங்கேறிவரும் நிலையில் இதன் பலன்களை தமிழ் மக்களும் இன்று அனுபவிக்ககூடியதாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அபிவிருத்தி மற்றும் உரிமைகள் என இரண்டையும் தமிழ் மக்கள் அறுவடை செய்யக்கூடிய வகையில் களநிலைமையை மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின்கீழ் கண்டி, கந்தகிட்டிய தமிழ் வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டுமாடிக் கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் கடந்த காலங்களில் அபிவிருத்தியின் போது ஓரங்கப்பட்டன. எனவே, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ்ப் பாடசாலைகளைப் பலப்படுத்துவதற்கு, வளப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொது தேர்தலின் போது உறுதியளித்தோம்.

எனவே, இனி கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் தலைவிதி மாறும், இருண்ட யுகம் நீக்கி விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரண்டு வாக்களித்தீர்கள். இறுதியில் இரு தசாப்தங்களுக்கு பிறகு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ வரமும் கிடைத்தது.

அன்று உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பிரதான விடயங்களை குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றியுள்ளோம். மேலும் பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

குறிப்பாக கல்வித்துறைசார் உறுதிமொழியின் பிரகாரம் பன்வில பகுதியில் மாத்திரம் பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன. விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம் கணித, விஞ்ஞான பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 10 மில்லியன் ரூபாவுக்குமேல் அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அபிராமி தமிழ் வித்தியாலயத்திலும் 66 மில்லியன் ரூபா செலவில் கட்டங்கள் அமைக்கப்பட்டு, விரைவில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. இப்படி கல்வித்துறையில் ஏற்பட்ட புரட்சியை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

அதேவேளை, வாக்குரிமை மூலம் மக்கள் வழங்கிய பேரம் பேசும் சக்தியாலேயே எம்மால் இவற்றை செய்யக்கூடியதாக இருந்தது. அரசியல் பலம் இல்லாதுவிட்டால் எமக்கு எதுவுமே கிடைத்திருக்காது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதம் மக்கள் வசம் இருக்கின்றது. எனவே, தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் தக்கவைத்து மென்மேலும் மேன்மைபெறும் வகையில் சிந்தித்து வாக்குரிமையை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

மாறாக சொல்ஜாலங்களுக்கு மயங்கி, குறுகிய தேவைகளுக்காக பேரினவாதிகளுக்கும், கருப்பாடுகளுக்கும் சார்பாக செயற்பட்டால் மீண்டும் அரசியல் ரீதியில் அநாதையாம் நிலைமையே கண்டிவாழ் தமிழர்களுக்கு ஏற்படும்.

இந்த நிலைமையை உருவாக்குவதற்காகவே பேரினவாதிகளின் ஒப்பந்தத்தை ஏற்று எங்களை சூழவுள்ளவர்களே காலைவாரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

துரோகச் செயல்களுக்கு கண்டிவாழ் தமிழர்கள் என்றும் துணைபோகமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. படை, பட்டாளத்தோடு களமிறங்கிய வெள்ளையர்களையே அன்று விரட்டியடித்த மண் இது.

எனவே, கருப்பாடுகளை களையெடுப்பதற்கு எமது மக்களுக்கு சொல்லிக்கொடுக்க தேவையில்லை. அது அவர்களில் இரத்தத்திலேயே ஊறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.